செவ்வாயில் 5000 நாட்களைக் கடந்த ஒரு பயணம் (THE OPPORTUNITY & SPIRIT ROVERS)

2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஏழாம் தேதியில் தான் இந்தப் பயணம் தொடங்கியது. இந்த நாளில் தான், spirit மற்றும் opportunity என்ற பெயர்களைக் கொண்ட இரண்டு தளஉளவிகள் (rovers) நாசாவிலிருந்து, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டன. கிட்டத்தட்ட ஆறு மாத பயணத்திற்குப் பிறகு, 2004 ஆம் ஆண்டு, ஜனவரி 24 ஆம் நாளில், இந்த இரண்டு தள உளவிகளும், செவ்வாய் கிரகத்தை அடைந்தன. ஆனால் இவை அவ்வளவு எளிதில் செவ்வாய் கிரகத்தை அடைந்துவிடவில்லை.

Steve Squyres எனும் புவியியல் வல்லுநர், இரண்டு தள உளவிகளை, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புமாறு, நாசாவிற்கு மனு அளித்தார். ஆனால், பத்து வருடங்களாக நாசா அவரது மனுவை ஏற்கவில்லை. அதன் பிறகு ஒரு வழியாக, அவருக்கு நாசா வாய்ப்பளித்தது. ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்ட, கால அவகாசம் இரண்டு வருடங்கள் மட்டுமே. ஏனென்றால், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை தான் பூமியும் செவ்வாய் கிரகமும் அருகருகே வந்து செல்கின்றன.

எனவே Steve squyres அவர்களின் தலைமையில் ஒரு மிகப்பெரிய குழு நியமிக்கப்பட்டு, வேலைகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டன. அவர்களுடைய கடின உழைப்பில், opportunity மற்றும் spirit எனப்படும் இரண்டு தளஉளவிகள் உருவாக்கப்பட்டன. அவை இரண்டும், உருவத்திலும், அளவிலும், ஒரே மாதிரியாகவே இருக்கும். Opportunity உளவியானது, தனக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து சோதனைகளிலும் தேர்ச்சி பெற்றது. Spirit உளவி, தனது சோதனைகளில் முழுமையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், தன் வேலைகளைக் கச்சிதமாகவே செய்தது.

எனவே, இரண்டு உளவிகளும் தயாரான நம்பிக்கையில், 2003 ஆம் ஆண்டில் இவை இரண்டும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. முன்பு கூறப்பட்டிருப்பது போலவே 2004 ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் இவை இரண்டும் செவ்வாய் கிரகத்தை அடைந்தன.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திலிருந்து அதன் தரையை அடைவதற்கு இடைப்பட்ட, ஆறு நிமிட கால அளவு, ஒவ்வொரு விண்கலத்திற்கும் மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் இதற்கு முன்பு அனுப்பப்பட்ட எந்த ஒரு விண்கலமும் செவ்வாய் கிரகத்தில் இந்த ஆறு நிமிடங்களைக் கடந்து பாதுகாப்பாகத் தரை இறங்கவில்லை. எனவே, அந்த சமயத்தில் மக்கள் பலரும் இந்த திட்டத்தில் மற்றும் பெரும் அளவில் நம்பிக்கை இல்லாமலே இருந்தனர்.

இந்த இரண்டு தளஉளவிகளும் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, முதல் 10 நிமிடங்களுக்கு எந்த செய்தியையும் அனுப்பவில்லை. அந்த பத்து நிமிடங்களில், அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த விஞ்ஞானிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்திருந்தனர். ஆனால் அதன் பிறகு, இரண்டு உளவிகளிலிருந்தும் செய்திகள் கிடைக்கத் தொடங்கின. எனவே, அவை இரண்டும் பாதுகாப்பாகத் தரையிறங்கியிருப்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்து கொண்டனர்.

இந்த இரண்டு உளவிகளும், செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டதற்கான முக்கிய காரணம், அங்கு நீர் இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிவதற்காகவே. இந்த இரண்டு உளவிகளும், சூரியனிலிருந்து கிடைக்கும் ஆற்றலைத்தான், நகர்வதற்குப் பயன்படுத்திக் கொண்டன.

Spirit தளஉளவியானது, முந்தைய காலங்களில் ஏரி இருந்ததாகக் கருதப்படும் Gusev எனும் பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்பட்டது. அதே நேரத்தில், Opportunity உளவியானது, அதிகப்படியான கனிம வளங்கள் நிறைந்துள்ளதாகக் கருதப்படும், Meridiani planum எனும் பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்பட்டது. இந்த இரண்டு பள்ளத்தாக்குகளும் செவ்வாய் கிரகத்தில் எதிரெதிர் துருவங்களில் உள்ளன. இந்தப் பகுதியிலிருந்துதான், செவ்வாய் கிரகத்தில் 5000 நாட்களைக் கடந்த ஒரு பயணம் தொடங்குகிறது.

பயணத்தின் தொடக்கம்

இந்த இரண்டு உளவிகளும், வினாடிக்கு 5 சென்டிமீட்டர் என்ற குறைவான வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருந்தன.

நீர் இருக்கும் என்ற நம்பிக்கையில் Gusev பள்ளத்தாக்கிற்கு அனுப்பப்பட்ட spirit உளவியானது, அந்த இடத்தில், வெறும் எரிமலைப் பாறைகள் மட்டுமே இருப்பதைக் கண்டுபிடித்தது. ஆனாலும் முயற்சியைக் கைவிடாமல், அந்தப் பள்ளத்தாக்கில் இருந்த, Columbia Hills மேலும் மலைப்பகுதியை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்து spirit தளஉளவி.

இந்தப் பக்கத்தில் opportunity உளவியானது கோலிகுண்டுகள் அளவில் இருக்கக்கூடிய சிறு சிறு ஹேமடைட் எனும் கற்களைக் கண்டுபிடித்தது. இந்தக் கற்கள் இரும்பால் ஆனவை. மேலும், நீர் இருந்திருந்தால் மட்டுமே இந்த வகை கற்கள் உருவாக்கப்பட்டிருக்கும். எனவே, செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்ததற்கான முதல் அடையாளத்தை opportunity கண்டுபிடித்தது. மேலும் செவ்வாய் கிரகத்தில் தனது 20 வது நாளில், சூரியன் அஸ்தமனம் ஆவதையும் புகைப்படம் எடுத்து அனுப்பியது. இந்த கிரகத்தில், சூரிய அஸ்தமனம் நீல நிறத்தில் தெரிந்தது.

இந்த இரண்டு உளவிகளும், 90 நாட்கள் செவ்வாய் கிரகத்தில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் தான் உருவாக்கப்பட்டன. ஆனால், 90 நாட்களையும் தாண்டி இந்த இரண்டு உளவிகளும் செவ்வாய் கிரகத்தில் பயணித்தன. முதல் 90 நாட்களில் விஞ்ஞானிகள், தங்கள் தூக்கத்தையும் மறந்து, இந்த உளவிகளைக் கண்காணிக்கத் தொடங்கினர்.

78 வது நாளில், அதிகப்படியான குளிரின் காரணமாக, spirit உளவி பாதிக்கப்பட்டிருந்ததால், அதற்கும் பூமிக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையும் நம் விஞ்ஞானிகள் சிரமப்பட்டு, சரி செய்து விட்டனர்.

செவ்வாய் கிரகத்தில், அடிக்கடி ஏற்படும் புயல்களின் காரணமாக, இரண்டு தளஉளவிகளிலும் இருக்கக்கூடிய சூரியப் பலகைகளில் (solar board) தூசி படியத் தொடங்கியது. ஆனால் அங்கு ஏற்படக்கூடிய dust devils எனப்படும் சிறு சிறு சூறாவளிகள், அந்த தூசுகளையும் துடைத்துச் சென்றுவிட்டன.

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலமானது, பூமியின் வளிமண்டலத்தில் வெறும் 1% மட்டுமே கொண்டுள்ளது. எனவே, அந்த கிரகத்தால் வெப்பத்தைப் பெரிதளவில் தக்க வைத்துக் கொள்ள முடியாது. இதனால் அந்த கிரகத்தில் இரவு நேரங்களில் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில் இரண்டு தள உளவிகளுக்கும், அவற்றில் உள்ள மின்கலம் (battery) தான் வெப்பத்தைக் கொடுத்து உதவியது.

90 நாட்களைக் கடந்தும் இரண்டு உளவிகளும் தங்கள் பயணத்தைத் தொடர்ந்து கொண்டே தான் இருந்தன.

பயணம் தொடர்கிறது.

Gusev பள்ளத்தாக்கிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய opportunity உளவியானது, தனது 131வது நாளில், Endurance எனும் பள்ளத்தாக்கை அடைந்தது. இந்த இடத்தில், சற்று அமிலத்தன்மையுடனான நீர் இருந்திருப்பதைக் கண்டுபிடித்தது. அங்கிருந்து தனது 315 ஆவது நாளில் பயணத்தைத் தொடங்கி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு, 6 km தொலைவில் உள்ள Victoria என்னும் பள்ளத்தாக்கை அடைந்தது.

இந்த இடத்தில் opportunity உளவியானது, ஜிப்சம் எனும் பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தது. இந்த ஜிப்சம் மூலக்கூறுகள், தண்ணீரின் அடிப்பகுதியில் மட்டுமே உருவாகும். எனவே செவ்வாய் கிரகத்தில் நீர் இருந்திருப்பதற்கான ஆதாரமாக இது கருதப்பட்டது. இந்த இடத்தில் தனது பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கையில், ஒரு சிறிய புதைமணல் போன்ற ஒரு பகுதியில் மாட்டிக்கொண்டது. கிட்டத்தட்ட 20 நாள் போராடிய பிறகு அந்தப் பகுதியிலிருந்து வெற்றிகரமாக வெளிவந்தது.

இந்த நேரத்தில் spirit உளவி, Colembia Hills என்னும் மலைப் பகுதியில் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தது. மலை ஏறிக் கொண்டிருக்கும்போது, அதன் முன் பகுதியிலிருந்த, ஒரு சக்கரம் செயலிழந்தது. எனவே, பின்புறமாகத் திரும்பி, செயலிழந்த சக்கரத்தை, இழுத்துக் கொண்டு மலை ஏறத் தொடங்கியது spirit உளவி.

Spirit உளவியின் முடிவு

இந்த நேரத்தில் செவ்வாய் கிரகத்தில், குளிர்காலம் தொடங்கியது. அந்த கிரகத்தில் பூமியை விட இரண்டு மடங்கு அதிக காலம் குளிர் நீடிக்கும். 1220வது நாளில், செவ்வாய் கிரகம் முழுவதும், புழுதிப் புயலால் சுற்றி வளைக்கப்பட்டது.
எனவே 4% சூரிய ஒளி மட்டுமே, இரண்டு உளவிகளுக்கும் கிடைத்தது.

எனவே, ஒரு நாளைக்கு, ஒருமுறை மட்டுமே பூமிக்கு செய்திகளை அனுப்புமாறு, இரண்டு உதவிகளுக்கும் நம் விஞ்ஞானிகள் தகவல் அனுப்பினார். இதன் காரணமாக மின்கலத்தில் ஆற்றல் சேமிக்கப்படலாம் அல்லவா?

ஆனாலும் கூட spirit உளவியால், அதிக காலம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. மின்கலத்தில், ஆற்றல் முழுவதும் குறைந்த காரணத்தால், 2011 ஆம் ஆண்டில், spirit உளவிக்கும் பூமிக்கும் இடையே இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டு, அந்த உளவி, முழுவதுமாக செயலிழந்தது. 1220 நாட்களைக் கடந்தும், பல செய்திகளை, நமக்கு அளித்த, இந்த உளவிக்கு, நமது நன்றியை உரித்தாக்கியே ஆகவேண்டும்.

விட்டுக்கொடுக்காத opportunity

மேலே கூறப்பட்ட, புழுதிப் புயலிலிருந்தும், opportunity தப்பித்துக் கொண்டது. ஆனால், அந்தக் கிரகத்தில், இப்போது அந்த உளவி மட்டுமே தனியாக இருந்தது. ஆனாலும் விட்டுக் கொடுக்காமல், தனது பயணத்தை தொடர்ந்து கொண்டேதான் இருந்தது…….

Victoria பள்ளத்தாக்கிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இந்த உளவியானது, கிட்டத்தட்ட 21 கிலோமீட்டர் பயணம் செய்து, ஏழு வருடங்கள் கழித்து Endeavour என்னும் பள்ளத்தாக்கை அடைந்தது. செல்லும் வழியில் பல வித விதமான எரி கற்களையும் கண்டுபிடித்தது. இந்த நேரத்தில், இந்த உளவியின் ஞாபகசக்தி குறையத் தொடங்கியது. வயதானால் நமக்கும் இவையெல்லாம் ஏற்படும் அல்லவா? அதுபோலத்தான்.

இந்தப் பள்ளத்தாக்கில் தான், தனது 5000 ஆவது நாளை அடைந்தது இந்த உளவி. தனது 5000 ஆவது நாளில், தன்னைத்தானே ஒரு புகைப்படம் எடுத்து, பூமிக்கு அனுப்பியது. அதனைப் பார்த்த நமது விஞ்ஞானிகளல் பலர் அழுதேவிட்டனர்.

Opportunity உளவியின் முடிவு

Opportunity இருந்த இடத்திற்கு அருகிலேயே, Gully எனும் இடத்தில், ஆறு ஓடுவது போன்ற ஒரு அமைப்பை, செயற்கைக்கோளின் உதவியுடன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். எனவே அந்தப் பகுதிக்கு தனது பயணத்தை தொடர்ந்தது opportunity. ஆனால் இப்போது மீண்டும் செவ்வாய் கிரகத்தை, புழுதிப்புயல் சுற்றி வளைத்தது. இது, முன்பு வந்த புயலை விட இரண்டு மடங்கு வலுவானதாக இருந்தது.

எனவே சூரிய ஒளியானது, இந்த உளவியை 1% கூட அடையவில்லை. மேலும் இதன் மின்கலத்தில் இருந்த ஆற்றல் படிப்படியாகக் குறையத் தொடங்கியது. இதன் காரணமாக, 5200 நாட்களைத் தாண்டி, பயணம் செய்த, opportunity உளவியானது, முழுவதுமாகச் செயலிழந்தது.
இந்தப் புயல் நீங்கிய பிறகு, நமது விஞ்ஞானிகள், கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான தகவல்களை இந்த உளவிக்கு அனுப்பினர். ஆனால், எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.

அந்த உளவி இறப்பதற்கு முன்பு, கடைசியாக, அங்கிருந்த வானத்தின் புகைப்படத்துடன், ஒரு தகவலையும் அனுப்பியிருந்தது. அது அனுப்பிய தகவல் பின்வருமாறு…..

“MY BATTERY IS LOW,
AND IT’S GETTING DARK”

இவ்வாறாக 2019 ஆம் ஆண்டில், 5200 நாட்களைக் கடந்தும், ஒரு கிரகத்தில் தனியாகப் பயணம் செய்த, opportunity எனும் உளவியின் வாழ்க்கை முடிவடைகிறது.

வெறும் 90 நாட்கள் மட்டுமே, செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட, இந்த உளவியானது, 5000 நாட்களையும் கடந்து, பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டு, செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான பல ஆதாரங்களையும் கண்டுபிடித்து, தனியாகவே பல நாட்களைக் கழித்து, ஒரு மிகப்பெரிய சாதனையைப் படைத்தது.

எனவே,

வாழ்க்கையின் எந்த கட்டத்திலும், நமது முயற்சியைக் கைவிட்டு விடக்கூடாது.

இதுவே, opporunity எனும் இயந்திரம் நமக்குக் கற்றுக் கொடுத்த ஒரு சிறந்த பாடமாகும்.