புளூட்டோ பற்றிய ஆச்சரியமூட்டும் தகவல்கள்

நாம் கண்களால் பார்ப்பதற்கு முன்பே, அறிவியலாளர்களின் கணிப்பினால் மட்டுமே, கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கோள்தான் புளூட்டோ ஆகும். 1915 ஆம் ஆண்டில், நெப்டியூனின் சுற்றுப்பாதையை ஆராய்ந்து கொண்டிருக்கும்போது, அதன் சுற்றுப் பாதையில் மற்றொரு பொருளின் குறுக்கீடு இருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். அது ஒரு கிரகமாகக் கூட இருக்கலாம் என்றும் ஊகித்திருந்தனர்.

பின்னர் 1930 ஆம் ஆண்டில் Clyde என்னும் வானியலாளர், தொலைநோக்கிகளால் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை, ஆராய்ந்ததன் மூலமாக, நெப்டியூனுக்கு அடுத்தபடியாக மற்றொரு கிரகம் இருப்பதை உறுதி செய்தார். பிறகு, Venetia Burney Phair எனும் 11 வயது நிரம்பிய ஒரு சிறுமியால், இந்த கிரகத்திற்கு, “புளூட்டோ” என்று பெயரிடப்பட்டது. இது ஒரு கிரேக்கக் கடவுளின் பெயராகும்.

புளூட்டோ தன்னைத்தானே ஒரு முறை சுற்றிவர, 153 மணிநேரம் எடுத்துக் கொள்ளும். இந்த கிரகத்தில் ஒரு வருடம் நிறைவடைய, 248 புவி வருடங்கள் ஆகும்!

இந்த கிரகம், ஒரு நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. மற்ற கிரகங்களை விட இதன் வட்டப்பாதை மிகவும் பெரியதாகும். எனவே சூரியனைச் சுற்றி வர அதிக காலங்கள் எடுத்துக் கொள்ளும். மேலும், இதன் சுற்றுப்பாதையானது 17° சாய்வாக உள்ளது.

1977 ஆம் ஆண்டில் ஹபிள் (hubble) எனும் விண்வெளித் தொலைநோக்கி, புளூட்டோவை ஒரு புகைப்படம் எடுத்தது.

இதன்பிறகு, புளூட்டோவைப் பற்றிய பல ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்தன. இது, கோள வடிவில் இருப்பதாலும், சூரியனைச் சுற்றி வருவதாலும், இதனை ஒரு கிரகம் என்றே விஞ்ஞானிகள் கருதினர். பிறகு 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், புளூட்டோவை ஆராய்வதற்காக  New Horizon எனும் ஒரு விண்கலத்தை நாசா, விண்ணுக்கு அனுப்பியது. 2020 ஆம் ஆண்டுக்குள் இந்த விண்கலம் புளூட்டோவை  ஆராய வேண்டும். ஏனென்றால், அந்தப் பகுதியில் வெப்பம் மிகவும் குறைவாக இருப்பதால், விண்கலம் எளிதில் உறைந்து விடும்.

இந்த விண்கலம் தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்க, பூமியில், புளூட்டோவைப் போலவே பல கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. அவை மிகவும் சிறியதாகவும் இருந்தன. அவற்றில் சில, நம் நிலவை விடவும் சிறியதாக இருந்தன. இவற்றையெல்லாம் கிரகமாக அறிவித்தால் நம் சூரியக் குடும்பத்தில் 115 கிரகங்களுக்கு மேல் இருக்கும்!
எனவே 2006 ஆம் ஆண்டில், IAU (International Astronomical Union), எனும் அமைப்பில், ஒரு கோள், என்னென்ன பண்புகளையெல்லாம் கொண்டிருக்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டது. இந்த அமைப்பில் 90 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கே எடுக்கப்பட்ட முடிவின்படி, சூரியக் குடும்பத்தில் ஒரு பொருளை, கோளாக அறிவிக்க, மூன்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அவை :
  1. அந்தப் பொருள் சூரியனைச் சுற்றிவர வேண்டும்.
  2. அந்தப் பொருள், தன்னைக் கோள வடிவத்தில் வைத்துக் கொள்வதற்குத் தேவையான ஈர்ப்பு விசையைப் பெற்றிருக்க வேண்டும்.
  3. மேலும் அந்தப் பொருள் தனது சுற்றுப் பாதையைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும். அதாவது, சூரியனைச் சுற்றிவரும் வேறு எந்த பொருளும் இதன் பாதையில் குறுக்கிடக் கூடாது.
இந்த மூன்றாவது நிபந்தனையை, புளூட்டோ கடைபிடிக்கத் தவறியது. இதன் சுற்றுப்பாதையில், பல விண்பொருட்கள் குறுக்கிட்டன. எனவே, புளூட்டோவானது கிரகங்களுக்கான பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
இந்த மூன்றாவது நிபந்தனையை கடைபிடிக்காமல், மற்ற இரண்டு நிபந்தனைகளையும் கடைபிடிக்கக் கூடிய கிரகங்களுக்கு, குறுங்கோள்கள் (dwarf planets) என்று பெயரும் இடப்பட்டது. எனவே, 2006ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24 ஆம் நாள், புளூட்டோ, கிரகப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு குறுங்கோளாக அறிவிக்கப்பட்டது.
இதுபோலவே மொத்தமாக ஐந்து குறுங்கோள்கள் இந்த சூரியக் குடும்பத்தில், கண்டுபிடிக்கப்பட்டன! அவை முறையே, செரெஸ் (Ceres), புளூட்டோ (Pluto), ஹீயுமியா (Heumea), மேக்மேக் (Makemake) மற்றும் எரிஸ் (Eris) போன்றவை ஆகும்.

இவற்றில், செரெஸ் எனும் குறுங்கோளைத் தவிர, மற்ற அனைத்தும் புளூட்டாய்டுகள் (plutoids) என்று அழைக்கப்பட்டன.

நெப்டியூனை விட அதிக தொலைவில் இருக்கக்கூடிய குறுங்கோள்கள் மட்டுமே ப்ளூட்டாய்டுகள் ஆகும். ஆனால் “செரெஸ்” குருங்கோளானது, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையே உள்ள, astroid belt எனும் அதிகப்படியான விண்கற்கள் இருக்கக்கூடிய பகுதியில் அமைந்துள்ளது.

நெப்டியூனைக் கடந்து Kuiper belt எனும் மற்றொரு, அதிகப்படியான விண்கற்களைக் கொண்ட பகுதியும் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அந்தப் பகுதியில் தான் புளூட்டோவும் உள்ளது. இங்கே, பத்தாயிரம் கோடிக்கும் அதிகமான விண்கற்கள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

இப்போது விண்வெளியில் ஏவப்பட்ட அந்த விண்கலத்தின் கதைக்கு வருவோம். புளூட்டோவை, கிரகப் பட்டியலிலிருந்து நீக்கிய பிறகும் கூட, New Horizon விண்கலத்தின் பயணத்தில், நமது விஞ்ஞானிகள் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
2006 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இந்த விண்கலமானது, ஒன்பது ஆண்டுகள் விண்வெளியில் பயணம் செய்து, 2015 ஆம் ஆண்டில் புளூட்டோவை அடைந்தது. மேலும், புளூட்டோவை நெருங்கியவுடன், அதன் புகைப்படத்தை எடுத்து பூமிக்கு அனுப்பியது.

 

அந்தப் புகைப்படத்திலிருந்து, அதன் விட்டத்தைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் ஆச்சரியமடைந்தனர். ஏனென்றால் அதன் விட்டம், வெறும் 2376 km மட்டுமே ஆகும். இது, காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரிக்கு இடையே உள்ள தொலைவை விடக் குறைவாகும்! மேலும் இந்த கிரகம், நமது நிலவைவிடச் சிறியதாக இருப்பதை விஞ்ஞானிகள் உறுதிசெய்தனர்.
ஆனால் இந்த கிரகத்திற்கும், ஐந்து நிலவுகள் உள்ளன!! இவற்றில், சரோன் (charon) எனும் நிலவுதான் மிகப்பெரியதாகும். இதன் விட்டம் 1212 km ஆகும். மேலும் புளூட்டோ குறித்த பல ஆய்வுகளை இந்த விண்கலம் மேற்கொண்டது.
இதன் மேற்பரப்பில் நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு, நீர், மற்றும் மீத்தேன், போன்றவை, திட நிலையில் உள்ளன.  இவற்றில் அதிக அளவில் நைட்ரஜன் மற்றும் நீர் ஆகியவை பனிக்கட்டியாக உள்ளன. இதன் மேற்பரப்பில் வெப்பநிலையானது -250° C எனும் அளவில் உள்ளது. இதன் மேற்பரப்பிற்கு உட்பகுதியில், வெப்பம் அதிகமாக இருப்பதால், நீரானது திரவ நிலையில், கடலாக ஓடிக்கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒவ்வொரு முறை சூரியனைச் சுற்றி வரும் போதும், இந்த புளூட்டோ  கிரகமானது, 20 ஆண்டுகள் நெப்டியூன் கிரகத்திற்கு முன்பாக வந்து பயணம் செய்கிறது.
பூமியைப் போல இதன் மையப்பகுதி திரவ நிலையில் இல்லாமல், திட நிலையில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
New Horizon  அனுப்பிய ஒரு புகைப்படத்தில், புளூட்டோவின்  மேற்பரப்பில், நத்தை போன்ற ஒரு அமைப்பு இருப்பதை விஞ்ஞானிகள் கவனித்தனர். அது, வேற்றுகிரக வாசியாகக் கூட இருக்கலாம் என்று, சிலர் வதந்திகளைப் பரப்பினர். அதன் பிறகு, அவை அந்தக் கோளில் உள்ள  மாசுக்களால் ஆன பனிக்கட்டி போன்ற ஒரு அமைப்பே ஆகும் என்று நாசா விளக்கமளித்தது.
இந்த கிரகம், பூமி தன்னைத்தானே சுற்றும் திசைக்கு எதிர் திசையில் சுழல்கிறது. இதன் மைய அச்சானது 120° சாய்வாக உள்ளதால், இது சூரியனைச் சுற்றி, உருண்டு வருவது போல் தெரியும்!
இவ்வளவு ஆச்சரியங்களைத் தன்னில் கொண்டுள்ள புளூட்டோ எனும் குறுங்கோளானது, இன்றும் சில 90’s குழந்தைகளால் ஒரு கோளாகவே பார்க்கப்படுகிறது.