காணி உறுதியும் காணி உரிமையும்

காணி உறுதியும் காணி உரிமையும்

உங்களிடம் உள்ள காணிக்கான உறுதி ( Deed ) ஓர் இறுதிச்சான்று பத்திரம் ஆகுமா ?

பதில், நிச்சயமாக இல்லை. ஆனால் பொது மக்கள் பலர் தங்களிடம் உள்ள காணி உறுதி ஒன்றே தம் காணியின் உரிமையாளர் என்பதை எண்பிக்கும் என தவறாக விளங்கிக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் நீதிமன்றின் முன்னிலையில் அக்காணியின் மீது அக்கறை உடையோர் யாருமே உங்கள் உறுதியின் வலிதார்ந்த தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். உங்களிடம் உள்ள உறுதி ஆனது நீதிமன்றின் முன்பு ஒரு முகத்தோற்ற அளவிலான ( Prima Facie )ஆவணமாகவே கருதப்படும். நீங்கள் முதலில் காணிப்பதிவக இடாப்பில் உங்கள் உறுதியின் பதிவை மேற்கொள்வதால் உங்களுக்கு பின்னர் பதியப்படும் நபர்களை விட ஓர் முன்னுரிமையை (Priority) பெறுகிறீர்கள். 

ஆனால் இன்னும் இந்த “முன்னுரிமை” என்ற பதம் எமது நீதிமன்றங்களினால் தெளிவாக என்ன பயன்பாடு என்று வரையறுக்காமை காணிச்சட்டத்தில் ஓர் இடைவெளியை உருவாக்கியுள்ளது

மேற்போர்ந்த பிணக்குகட்கு தீர்வேதும் இல்லையா ?

காணிப்பிணக்குகளை கையாளவும் , எதிர்காலத்தில் காணிகளின் உரிமைத்தன்மையை நிச்சயப்படுத்தி கொள்ளவும், மோசடிகளை தவிர்க்கவும், கணணி இற்றைபடுத்தற் செயற்பாடுகள் மூலம் வினைத்திறனை பேணவும் 1998ம் ஆண்டு உரித்து பதிவுச்சட்டத்தை ( Registration of Title Act ) பிம் சவிய நிகழ்ச்சி திட்டம் மூலம் அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.

உரித்துப்பதிவு ( Registration of Title ) என்றால் என்ன ?

இது முதன் முதலில் அவுஸ்ரேலியாவில் அமுலாக்கப்பட்ட ஓர் காணி அளவீட்டு முறையாகும். இதன் போது அரசாங்கம் நாட்டின் சகல காணிகளையும் அளவை செய்து அதன் மீது உரித்து உடையவர்கள் என தகுதி காண்போருக்கு காணி உரித்து சான்றிதழ் வழங்கும். இச்சான்றிதழானது காணி உரிமை தொடர்பில் இறுதிச்சான்றாவணமாக அனைத்து நிர்வாக, நீதி விடயங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

பிம் சவிய ( Bim Saviya ) என்றால் என்ன ?

பிம் சவிய என்பது பின்வரும் நான்கு அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக உரித்து பதிவு முறைமையை அமுலாக்குவதற்கான ஓர் செயற்றிட்டமாகும்.
01.நில அளவையாளர் திணைக்களம்
02. பதிவாளர் திணைக்களம்
03. காணி ஆணையாளர் நாயக திணைக்களம்
04. காணி உரித்து நிர்ணய திணைக்களம்.
இதன் நடைமுறைகள் யாவை ?
முதலாவதாக பிரதேசம் தெரிவு செய்யப்பட்டு நில அளவையாளர் நிறுவனத்தால் அப்பிரதேசம் முழுமையாக அளவீடு செய்யப்படும். பின்னர் பொதுமக்கள் தங்கள் காணிகட்கு உரிமைகளை கோருமாறு வேண்டப்படுவர். அப்போது காணிக்கு உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தமது காணி என முன்மொழிவு ஒன்றினை வெளிப்படுத்துவர். குறிப்பிட்ட காணிக்கு வேறு எவராலும் உரிமைத்தடங்கற்கள் ஏற்படுத்தப்படாது விடத்து என இரு தரப்படுத்தப்பட்ட காணி உரித்து சான்றிதழ் வழங்கப்படும். அதே காணிக்கு வேற்றார் மூலம் உரிமைத்தடங்கல் ஏற்படத்தப்படின் அது மாவட்ட நீதிமன்றின் நியாயாதிக்கத்திற்குட்பட்டதாகும்.

காணி உரித்து சான்றிதழ் ( Land Title Certificate ) என்றால் என்ன ? அதன் நன்மைகள் என்ன ?

மேற்குறிப்பிட்ட செயன்முறைகளின் இறுதியில் காணியின் சொந்தக்காரருக்கு வழங்கப்படும் ஓர் சான்றிதழ். இது உங்களிடம் இருப்பின் உங்களின் காணி உரிமை தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது.

அதோடு தொடர்ச்சியான கொடுக்கல் வாங்கலிலும் ( விற்பனை / நன்னொடை) இங்கு உயர்வினைத்திறன் இங்கு பாதுகாக்கப்படுகின்றது.
காணியை உரிமை மாற்றம் செய்யும் போது குறித்த சான்றிதழ் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டு விடும். பிறகு புதிய உரிமையாளர்கட்கு புதிதாக ஒழுங்கமைக்கப்பட்ட உரித்து சான்றிதழ் வழங்கப்படும். இதே போல காணிகளை துண்டாடி கைமாற்றினும் உரிய காணி சான்றிதழ் கையளிக்கப்பட்டு துண்டங்கட்கான சான்றிதழ் வழங்கப்படும் என்பதால் ஆவண பதிவு முறைமையின் கீழ் உள்ள குறைபாடுகள் மற்றும், மோசடிகட்கு தீர்வாய் அமையும் எனலாம்.

காணி உறுதியும் காணி உரிமையும்
காணி உறுதியும் காணி உரிமையும்